விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே இன்று காலை 5 மணி அளவில் கல்லூரிக்கு அனுப்புவதற்காக தன்னுடைய மகளை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் அழைத்துச் சென்றுள்ளார். செஞ்சி பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது விக்கிரவாண்டி அருகே உள்ள கஞ்சனூர் அடுத்த பூண்டி பெட்ரோல் பங்க் அருகே விழுப்புரத்திலிருந்து செஞ்சி நோக்கி வந்தால் லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் மற்றும் அவருடைய மகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். உடனே விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
