தமிழ் சினிமாவின் பழமையான ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தில், எம்.ஜி.ஆர் நடிப்பில் 1966ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அன்பே வா’. ஏ.சி. திரிலோகச்சந்தர் இயக்கிய இந்தப் படம், ஏ.வி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் கலர் படம் என்பதுடன், அவர் முழுக்க முழுக்க ஒரு காதல் படத்தில் நடித்ததும் இதுவே முதல்முறை ஆகும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து, வாலி அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார்.
இன்றும் நிலைத்து நிற்கும் இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்’ என்ற பாடல் உருவான விதத்தை வாலி ஒருமுறை பகிர்ந்துள்ளார். கம்போஸிங்கிற்குச் செல்லும் முன் ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்த வாலி, அங்கு ஒலித்த ‘பேசுவது கிளியா’ பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்கள், “எம்.ஜி.ஆர்-க்கு நிலைக்கும் பாடல்களைக் கண்ணதாசனைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது” என்று பேசியதைக் கேட்டார்.
இதனால் தனக்கு சவால் விடப்பட்டதாக உணர்ந்த வாலி, கம்போஸிங் அறையில் அமர்ந்து பத்து நிமிடம் ஆழ்ந்து யோசித்தபின், இந்தப் பாடலின் பல்லவியான ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்…’ என்பதை எழுதினார். பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர், வாலியை உடனடியாக வரவழைத்துப் பாராட்டியதுடன் முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.
