பெங்களூருவில், டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான நபருக்கு மயக்க மருந்து கொடுத்து, ₹6 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மென்பொருள் பொறியாளர்களைப் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருச்சியைச் சேர்ந்த கவிப்ரியா அண்ணாதுரை (24) மற்றும் கரூரைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் சந்திரமோகன் ஆவர். நவம்பர் 8ஆம் தேதி பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரில், ஹேப்பன் (Happn) டேட்டிங் செயலி மூலம் இரண்டு மாதங்களுக்கு முன் கவிப்ரியாவுடன் அறிமுகமானதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நவம்பர் 1ஆம் தேதி இந்திரநகரில் உள்ள உணவகம் ஒன்றில் இருவரும் சந்தித்துள்ளனர். அதன்பின்னர், அருகிலுள்ள ஒரு விடுதிக்குச் சென்று இரவு உணவு முடித்த பிறகு, கவிப்ரியா கொடுத்த தண்ணீரைக் குடித்ததும் பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்தார். மறுநாள் காலையில் கண்விழித்தபோது, தன்னிடமிருந்த ₹6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும் ₹10,000 ரொக்கமும் கொள்ளை போனதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
விடுதியின் சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு துப்புத் துலக்கிய பெங்களூரு போலீசார், தமிழகம் சென்று, ஆடம்பர வாழ்க்கையால் ஏற்பட்ட கடன் சுமையை அடைப்பதற்காக இந்தக் கொள்ளைத் திட்டத்தைத் தீட்டியதாகக் கூறும், இந்த இரண்டு தகவல் தொழில்நுட்ப ஊழியர்களையும் கைது செய்தனர்.
