தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மேலும் பல கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜய் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியில் நிர்வாகிகள் பலரை நீக்கினாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தேமுதிக தங்களது கூட்டணியில் இணைவதை உறுதி செய்கிறதா அதிமுக என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஜனவரியில் கூட்டணி முடிவு பற்றி அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்த நிலையில் அவரை முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தற்போது சந்தித்துள்ளது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
