சென்னை, பெருங்குடியை சேர்ந்த நிதி தொழிலதிபர் கார்த்திக் (36), கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தைப் பார்த்து, போலி வர்த்தக செயலி ஒன்றில் ₹1.43 கோடி வரை முதலீடு செய்தார். அதிக லாபம் வந்ததாகச் செயலியில் காண்பித்தபோதும், பணத்தை எடுக்க முயன்றபோது மேலும் பணம் கேட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து செப்டம்பர் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் சூர்யா ஸ்ரீனிவாஸ், முன்னாள் வங்கி மேலாளர் சேஷாத்ரி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் முதலில் கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட கே.கே.நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் ரெட்டி (49) மற்றும் அவரது 15 ஆண்டுகால பணியாளர் அனிதா(40) ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி கைது செய்தனர்.
விசாரணையில், ஸ்ரீநாத் ரெட்டி சென்னையில் பல போலி நிறுவனங்களை உருவாக்கி, 30க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அவற்றைத் சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர் இந்தியா முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து, கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றதும் தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
