குஷியோ குஷி…! டிசம்பர் முதல் மகளிர் உரிமை தொகை…? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!

By Devi Ramu on கார்த்திகை 15, 2025

Spread the love

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்களுக்கு அமைச்சர் சக்கரபாணி நற்செய்தி கூறியுள்ளார். டிசம்பர் 15, 2025 முதல் தகுதியான அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தற்போது 1.16 கோடி பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து, தகுதி உள்ளவர்களுக்கு டிசம்பரிலேயே உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டமும், தமிழ் வழியில் 6 முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்துள்ளனர், பெண்கள் உயர்கல்வி செல்வது அதிகரித்துள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 வழங்கப்படுகிறது. விரைவில் 20 இலட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

   

குடிசை இல்லா தமிழ்நாடு என்ற கலைஞரின் கனவை நிறைவேற்ற 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது, ஏற்கெனவே ஒரு இலட்சம் வீடுகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன, ஒரு வீடு 3.50 லட்சம் ரூபாய் செலவில் அமைகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2000 வழங்கும் அன்புக்கரங்கள் திட்டமும் செயல்படுகிறது. இதுவரை 21 இலட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டும், 19 இலட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.