தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் தனித்து தான் போட்டி என சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டியின் நிலவுவதால் எந்தக் கூட்டணி (அ) கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.
இதில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என 42.81% பேரும், அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 26.9% பேரும், தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு 26.65% பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 3.61% பேரும் வாக்களித்துள்ளனர். ஏற்கனவே தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற முனைப்பில் செயல்பட்டு வரும் நிலையில் இந்த புதிய கருத்துக்கணிப்பு தமிழக அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
