பேருந்தின் படிக்கட்டில் பயணித்த மாணவன்… 2 பேருந்துகளுக்கு நடுவே நசுங்கி உயிரிழந்த சோகம்… நொடி பொழுதில் நடந்த துயரம்…!

By Nanthini on கார்த்திகை 12, 2025

Spread the love

சிவகங்கையில் தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற மினி பேருந்தின் படிக்கட்டில் பயணித்த மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கையில் இருந்து சூரக்குடி பகுதிக்கு தனியார் மினி பேருந்து நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பேருந்தின் படிக்கட்டில் ஏனாபுரம் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் மற்றும் புதுப்பட்டியை சேர்ந்த சூர்யா ஆகியோர் பயணித்துள்ளனர். ஆதம் பள்ளிவாசல் அருகே வளைவில் இடது புறம் திரும்பிய தனியார் பள்ளி வாகனத்தை பின்னால் வந்த மினி பேருந்து முந்தி செல்ல முயன்றது.

அப்போது பள்ளி வாகனத்தின் பின்புறம், இனி பேருந்தின் படிக்கட்டு உரசி இரண்டு வாகனங்களுக்கு இடையே சந்தோஷ் மற்றும் சூர்யா சிக்கி காயமடைந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த சூர்யா தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.