ரூ.1000 கட்டினால் போதும்…! லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…!!

By Devi Ramu on கார்த்திகை 9, 2025

Spread the love

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி டெய்சி இசபெல்லா. இருவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, வியாசர்பாடியைச் சேர்ந்த தமிழ்செல்வி (38) மற்றும் அவரது கணவர் பிரபு (41) ஆகியோர் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். இந்தத் தம்பதி “மாத சிறுசேமிப்பு திட்டம்” என்ற பெயரில் ஒரு திட்டத்தைத் தொடங்கினர்.

அதன்படி பலரிடமிருந்து மாதந்தோறும் பணம் வசூலித்தனர். மாதம் ரூ.1,000 செலுத்தினால் 12 மாதங்களுக்குப் பிறகு ரூ.16,000 திருப்பித் தருவதாக உறுதி அளித்தனர். நாங்களும் இத்திட்டத்தில் ரூ.8.5 லட்சம் செலுத்தினோம். எங்களைப் போலவே பலரும் பணம் கட்டினர்.

   

ஆனால் ஒரு கட்டத்தில் வசூலித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் நிறுவனத்தை மூடிவிட்டு தமிழ்செல்வியும் பிரபுவும் தலைமறைவாகினர். சுமார் 38 பேரிடமிருந்து ரூ.66 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து ஏமாற்றிய பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

   

இந்தப் புகாரைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மோசடியில் ஈடுபட்ட தமிழ்செல்வி, பிரபு மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த தமிழ்செல்வியின் தாயார் சரஸ்வதி (65) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.