தமிழகத்தை உலுக்கிய மூதாட்டிகள் கொலை….! தப்பி ஓடியவரை சுட்டு பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

By Devi Ramu on கார்த்திகை 8, 2025

Spread the love

சேலம் மாவட்டம்  இடங்கணசாலை காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரு மூதாட்டிகளும் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் பதிவானது. அதற்கு மறுநாள் நவம்பர் 4-ஆம் தேதி காலை, தூதனூர் காட்டுளவில் உள்ள கல் குவாரியில் சடலம் மிதக்கிறது என்று அப்பகுதி மக்கள் போலீஸுக்கு தகவல் தந்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆட்டையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தார். அவர்கள் வந்து குவாரியில் மிதக்கும் சடலத்தை மீட்டுப் பார்த்தபோது, ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்ட பெரியம்மா என்பவருடைய உடல் என்பது உறுதியானது.

   

அதன் பிறகு சுமார் மூன்று மணி நேரம் கழித்து பாவாயின் உடலும் மேலே வந்தது. அதையும் மீட்டெடுத்தனர். இரு உடல்களையும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் முதல் கட்ட விசாரணையில் பெரியம்மாவிடம் இருந்த இரண்டு தோடுகள், மூக்குத்தி, வெள்ளி கால் காப்பு ஆகியவை மற்றும் பாவாயிடம் இருந்த தோடு, வெள்ளி கால் காப்பு ஆகியவை காணாமல் போயிருப்பதை கண்டறிந்தனர்.

   

இதையடுத்து கல் குவாரி அருகிலுள்ள குடிசை வீட்டில் தங்கியிருந்த சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவர் நவம்பர் 3-ஆம் தேதி இரவு முதல் காணாமல் போனார். அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.  ஒரே நேரத்தில் இரு மூதாட்டிகளின் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அய்யனாரை சங்ககிரி அருகிலுள்ள ஒருக்காமலை பகுதியில் போலீசார் சுட்டு பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது  தெரியவந்துள்ளது. அவருக்கும் மூதாட்டிகளின் கொலைக்கும் என்ன தொடர்பு என போலீசார் விசாரித்து வருகின்றனர்.