மரணம் என்பது எப்போது யாருக்கு நிகழும் என்பது யார் அலையும் கணிக்க முடியாத ஒன்று. அப்படி ஒரு துயர சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது. கைலாசபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகின்றார். சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வரும் இவருக்கு காவியா என்ற எட்டு வயது மகள் ஒருவர் இருந்தார். இவர் பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல காவியா பள்ளிக்குச் செல்ல கிளம்பிய போது தாமதமானதால் உறவுக்கார பெண்ணான ஜனனி என்பவரிடம் குழந்தையை பள்ளியில் விட்டு விடுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் ஜனனியும் சிலிண்டர் கேஸை வண்டியில் ஏற்றியதால் தயங்கியுள்ளார்.
ஆனாலும் காவியாவை பின்னால் அமர செய்து வண்டியை ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் சாயத் தொடங்கியது. கேஸ் சிலிண்டர் சாய்ந்த போது ஜனனியின் வண்டி ஆட்டம் காணவே பேலன்ஸ் செய்ய முடியாமல் தவித்தார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த குழந்தை காவியா வலது பக்கமாக சரிந்து விழுந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் குப்பை லாரியின் சக்கரங்களில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. குப்பை வண்டியில் சிக்கி 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
