கர்நாடக மாநிலம் சோமந்தட்கா கிராமத்தில் வசிக்கும் 10 வயது சிறுமி ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது வழியில் இருந்த கடையில் சிப்ஸ் பாக்கெட் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த பாக்கெட்டை பிரித்து சில சிப்ஸ்களை சாப்பிட்ட போது பாக்கெட்டுக்குள் எரிந்து கருகிய பாம்பின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே பெற்றோரிடம் கூறினார். இதனைக் கண்டு பதறிப் போன பெற்றோர் உடனடியாக மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய பிறகு சற்று நிம்மதி அடைந்தனர். சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பாம்பின் எரிந்த உடல் எப்படி வந்தது என்று கடைக்காரரிடம் விசாரித்தபோது எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். உடனே இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இது போன்ற சிப்ஸ் பாக்கெட்டுகள் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரியாமல் அலட்சியமாக செயல்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
