தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. விஜய்க்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழகம் பொதுக்கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் கூட்டணி இல்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என்பது குறித்த கருத்து கணிப்பை சத்தியம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணி 105, அதிமுக 90 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இழுப்பறியாக உள்ள தொகுதிகளில் 25 திமுகவுக்கும், 14 அதிமுகவுக்கும் சாதகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் யார் வெற்றிவாகை சூடப் போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாகத்தான் உள்ளது.
