இந்தியர்களின் பாரம்பரிய உணவில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைப் பொருளாக கசகசா கருதப்படுகிறது. இதில் நீல பாப்பி விதைகள், வெள்ளை பாப்பி விதைகள், ஓரியண்டல் பாப்பி விதைகள் என மூன்று வகைகள் உள்ளன. இவற்றில் வெள்ளை கசகசா அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு போன்ற கனிமங்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்லது. இனிப்பு பொருட்களின் அலங்காரத்துக்கு பயன்படும் கசகசா, பாப்பி மலரின் செடி விதைகளிலிருந்து தயாராகிறது. விதைகளை எடுத்து நன்றாக காயவைத்து கசகசா செய்கின்றனர்.
உணவில் பயன்படும் கசகசா விதைகள் பேக்கிங் உணவுகளில் அதிகம் காணப்படும். இதில் கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை தவிர கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், சர்க்கரை, சோடியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
கசகசாவில் உள்ள நார்ச்சத்து செரிமானக் கோளாறுகளுக்கு நல்ல நிவாரணம் தரும். குடல் இயக்கத்தை சீராக்கும். இதய நோய் ஆபத்தை குறைக்கும் தன்மை கசகசாவுக்கு உண்டு என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கசகசாவில் உள்ள லினோலிக் கொழுப்பு அமிலம் கொழுப்பு அளவை குறைத்து, தடிப்புத்தோல் அழற்சியைத் தடுக்கும்.
கொழுப்பு மூலங்களை மாற்றி கரோனரி இதய நோய் ஆபத்தையும் குறைக்கும். எலும்புகளுக்கு வலிமை தரும் ஆற்றல் கசகசாவுக்கு உண்டு. மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆஸ்டியோபொராசிஸைத் தடுக்கும். சரும ஆரோக்கியத்துக்கு தேவையான லினோலிக் அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் உள்ளதால் காயங்கள் விரைவில் ஆறும்.
இவ்வளவு பலன்கள் இருந்தாலும் கசகசாவை அதிகம் சாப்பிட்டால் ஓபியாய்டு விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் அமலாக்க நிர்வாகம் கூறுவது போல் கசகசா விதைகளில் மார்பின், கோடின், தீபைன் போன்ற ஓபியம் ஆல்கலாய்டுகள் உள்ளன. செடியை வெட்டும்போது வெள்ளை பால் திரவம் வெளியாகும். உணவில் பயன்படுத்தும் விதைகளில் கழுவப்படாதவற்றின் மேற்பரப்பில் இந்த ஆல்கலாய்டுகள் கொஞ்சம் அதிகம் இருக்கும்.
இது சில சமயம் போதை உணர்வைத் தரலாம். உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது பாதுகாப்பானது. ஆனால் தனியாக தேநீர் வடிவிலோ நீரில் ஊறவைத்தோ குடிக்கும்போது ஒவ்வாமை ஏற்படுத்தலாம். அப்படி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
