கேரளா மாநிலம் வர்கலா அருகே குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளியதில் பலத்த காயமடைந்த 19 வயது பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகுட்டி என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் ஆலுவாவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீகுட்டி தற்போது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள எக்ஸ்பிரஸ் இரவு 8.30 மணியளவில் வர்க்கலா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீகுட்டியும் அவரது தோழி அர்ச்சனாவும் கழிப்பறையிலிருந்து வெளியே வந்தபோது, கதவின் அருகே நின்று கொண்டிருந்த சுரேஷ் குமார், அப்பெண்ணை ஓடும் ரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசரச் சங்கிலியை இழுத்து, காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த பெண் வர்க்கலா நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
