பாஜகவுடன் விஜய்… எல்லா விஷயமும் எங்களுக்கு தெரியும்… புதிய பரபரப்பை கிளப்பிவிட்ட திருமாவளவன்…!

By Nanthini on கார்த்திகை 2, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் சூசகமாக தெரிவித்திருந்தார். இருந்தாலும் விஜய் தரப்பிலிருந்து கூட்டணி குறித்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் பாஜகவை பகைத்துக் கொள்ள விஜய் விரும்பவில்லை என தெரிவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக வெற்றிக்கழகம், அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. தமிழக வெற்றி கழகம் வராதது குறித்து திருமாவளவன் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பாஜக அரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என இதன் மூலம் தெரிய வருகிறது என்று கூட்டணி குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் விஜய்க்கு சாதகமாக பாஜக உதவி செய்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.