புதுச்சேரி வில்லியனூர் ஜி என் பாளையம்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கும் முத்தையால் பேட்டை சோலை நகர் பகுதியில் சேர்ந்த திலகா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பிறகு பெற்றோர் சம்பந்தத்துடன் 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு தனுஸ்ரீ என்ற மகளும் சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.
இதனிடையே கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மனைவி மற்றும் குழந்தைகளை மணிகண்டன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் சொகுசு காரில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நாவர்குளம் பகுதிக்கு மணிகண்டன் சென்று இருந்தார். அப்போது இவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் காரை வழிமறித்து காரில் இருந்து அவரை வெளியே இழுத்து வெட்ட முயற்சித்தனர். அப்போது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறிது தூரம் ஓடிய மணிகண்டனை துரத்திச் சென்ற மர்ம கும்ப கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டனை வெட்டியவர் மணிகண்டன் மனைவியின் தம்பியான ராஜி (32) என்பது தெரிய வந்தது. மேலும் மணிகண்டனை தாக்க அவருடைய நண்பர் உதவி செய்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ள போலீசார் விசாரித்து வரும் நிலையில் பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
