புதுச்சேரி பாப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் சுகன்யா என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரகாஷும், சுகன்யாவும் கடந்த மாதம் 29ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து அசோக் நகர் பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர். அப்போது சுகன்யா தனது சித்தி மகள் குணசுந்தரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் சென்னைக்கு வந்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் சுகன்யாவை பார்க்க குணசுந்தரி அசோக் நகருக்கு சென்றார்.
காரில் அமர்ந்து குணசுந்தரியும் சுகன்யாவும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பைக்கில் வந்த சுகன்யாவின் கணவர் தனஞ்செழியன் பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க முயன்ற சுகன்யாவுக்கும் கையில் வெட்டு காயம் விழுந்தது. இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரகாஷ் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பிரகாஷும் சுகன்யாவும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா கணவரை விட்டு பிரிந்து புதுச்சேரிக்கு சென்று பிரகாஷ் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதேபோல பிரகாஷின் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். அந்த சமயம் சுகன்யாவும் பிரகாசும் நெருக்கமாக பழகி வந்தனர். சம்பவம் நடந்த அன்று சுகன்யா பிரகாஷுடன் சென்னைக்கு வந்த போது குணசுந்தரி மூலம் அந்த தகவல் தனஞ்செழியனுக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது நண்பர்களுடன் வந்து பிரகாஷை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் குணசுந்தரி, சுகன்யா, தனஞ்செழியன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
