காஞ்சிபுரத்தில் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கோட்டூரை சேர்ந்த வேல்முருகன் என்பவருடைய மகன் நிஷாந்த் (22) நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கி இவர் படித்து வந்த நிலையில் செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
மீண்டும் அந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் மூன்றாம் ஆண்டு செல்ல முடியும் என்ற நிலை இருந்துள்ளது. மேலும் தேர்வில் தோல்வி அடைந்தாலும் நிஷாந்த் மனவிரத்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு படிப்பதற்காக அங்குள்ள தனி அறைக்கு நிஷாந்த் சென்றுள்ளார். பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் அந்த அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் மாணவர்கள் அவர் இருந்த விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு அவர் கயிற்றால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். செமஸ்டர் தேர்வு தோல்வியால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
