டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால் அது சார்ந்த மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே மோசடிகளை நம்பி ஏமாறாமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர். சமீப காலமாக ஒரு புதுவித மோசடி அரங்கேறி வருகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதை கண்காணிக்கும் பொருட்டு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
அதன் மூலம் விதிமுறைகளையும் மீறும் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலமாக போலீசார் அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணிற்கு இ-சலான் அனுப்புகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி சில மோசடிக்காரர்கள் வாட்ஸ் அப்பில் விதிமீறல் இ-சலான் அனுப்புகின்றனர். அதில் வரும் லிங்கை தொட்டவுடன் வங்கி தொடர்பான தனிப்பட்ட விவரங்கள் போலி இணையதளம் மூலம் மோசடி செய்யப்படுகிறது.
அரசு தரப்பில் அனுப்பும் உண்மையான குறுஞ்செய்தியும், மோசடி கும்பல் அனுப்பும் குறுஞ்செய்தியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பதாக தெரிகிறது. உண்மையான குறுஞ்செய்தியில் அபராத ரசீது லிங்க் உடன் (gov.in) என்றே முடிவடையும். (.in) என மட்டும் முடிவடையும் link போலியானவை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். எனவே ரசீது வந்தால் அது உண்மையா என சரி பார்த்துவிட்டு அபராதத்தை செலுத்துமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
