உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த அபிஜித் சிங் சந்தல்(22) என்பவர் கான்பூர் சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றார். இவர் தன்னுடைய வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மெடிக்கல் கடைக்கு மருந்து வாங்க சென்ற போது மருந்தின் விலை குறித்து கடைக்காரருக்கும் மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மருந்து கடைக்காரரின் சகோதரர் விஜய் சிங் மற்றும் இரண்டு நண்பர்கள் கடைக்கு வந்துள்ளனர். அப்போது நான்கு பேரும் சேர்ந்து மாணவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் சிறிது நேரத்தில் கைகளப்பாக மாறியது. மோதலில் மாணவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முகத்தில் ரத்தம் வலிய தொடங்கியது.
இருந்தாலும் நான்கு பேரும் சேர்ந்து மாணவரை விடாமல் தொடர்ந்து தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடையில் இருந்த கூர்மையான பொருளை எடுத்து மாணவரின் வயிற்றில் குத்தி கிழித்துள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற மாணவர் உடல் முழுவதும் ரத்தத்துடன் தன்னுடைய வீட்டை நோக்கி ஓட முயற்சித்தார். இருந்தாலும் அவரை விடாமல் துரத்திச் சென்ற அந்த நான்கு பேரும் மாணவனை பிடித்து அவருடைய கையில் உள்ள இரண்டு விரல்களையும் வெட்டியுள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் மாணவர் கதறி துடித்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் கூடியதால் நான்கு பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்று விட்டனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மாணவரின் தலையில் 14 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
