கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஒரு இளம்பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவர் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார். கடந்த 18-ஆம் தேதி அதிகாலை இளம்பெண்ணின் அறை கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் லாரி டிரைவரான பெஞ்சமின் என்பவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
அவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று பெஞ்சமினை பிடிக்க முயன்றனர். அவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பெஞ்சமினை போலீசார் கைது செய்தனர். இவர் சாலை ஓரத்தில் தூங்கும் பெண்களை பலாத்காரம் செய்வது, ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருடுவது உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
