கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டூரில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள நார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது 3 வயது குழந்தை ராகினி திடீரென காணாமல் போனார். உடனே ராகினியின் பெற்றோர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது தென்னை நார் தொழிற்சாலையில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
