பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி…. காட்டமாக பதில் சொன்ன இயக்குனர் மாரி செல்வராஜ்… அப்படி என்ன சொன்னாரு தெரியுமா…?

By Devi Ramu on ஐப்பசி 21, 2025

Spread the love

பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 17-ஆம் தேதி பைசன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் திருநெல்வேலியில் பைசன் பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது செய்தியாளர் சாதிய பிரச்சனைகளை மட்டுமே வைத்து படம் எடுப்பது குறித்து இயக்குனரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மாரி செல்வராஜ் கூறியதாவது, ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த பெரிய பேய் சாதிதான்.

என்னுடைய ரசிகர்களுக்கு சாதியை கடந்து வரச் சொல்லி என்னுடைய கதையில் வைத்துக் கொண்டே தான் இருக்கிறேன். சாதியை பரவலான விவாதத்திற்கு உட்படுத்த முயற்சி செய்கிறேன். இந்த விவாதம் நீண்ட நாள் கழித்து நடப்பதால் அது முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால் போகப் போக அந்த உரையாடல் சாதாரணமாக மாறிவிடும். நான் சந்தித்த வலியை அடுத்த தலைமுறை சந்திக்கக் கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

   

சாதியால் வலியை அனுபவித்த ஒருவரிடம் அவருடைய வலியை சொல்லக்கூடாது என்று நீங்கள் எப்படி கூற முடியும்? என்னை பாதித்த கதையை என் அப்பாவின் கதையை, என் தாத்தாவின் கதையை சொல்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் உள்ளது. நான் சாகும் வரை அந்த கதையை மக்களிடம் சொல்வேன். நான் அதை சொல்லவா வேண்டாமா என்பதை அரசாங்கங்கள் முடிவு செய்யட்டும். சட்டம் முடிவு செய்யட்டும்.

   

ஒரு தனி மனிதன் முடிவு செய்யக்கூடாது. எல்லா சட்டத்திற்கும் உட்பட்டு தான் கதையை யோசிக்கிறேன். மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவர் என்கிற ஸ்டாம்ப் குத்தப்படும். அதை நான் வரவேற்கிறேன். சாதியால் மாரி செல்வராஜ் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளான ஒரு ஆள். தமிழ் சினிமாவில் அப்படி ஒருத்தர் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது. அதை மறந்து விட்டு நீ சாதாரணமாக ஆடு, பாடு என்றால் என்னால் முடியாது.

 

தொடர்ந்து சாதியை எதிர்பார்ப்பது தான் எனது முத்திரை. எனது ஐந்து திரைப்படத்தையும் முதலமைச்சர் பாராட்டியுள்ளார். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் என்னை கொண்டாடுகிறார்கள். யாரோ பத்து பேர் சொல்கிறார்கள் என்று மறுபடியும் மறுபடியும் ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் வேதனையையும் வலியையும் தாங்கிக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம் என மாரி செல்வராஜ் கடுமையாக பதில் அளித்துள்ளார்