தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளுக்கு தாவி வருகின்றன.
அதே சமயம் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் இபிஎஸ்சை முதல்வர் ஆக்குவோம் என்ற நயினாரின் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக கூட்டணி துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமல்லாமல் வரும் தேர்தலில் வெற்றி கூட்டணியாகவும் அமையும் என்று தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் இணைந்து இபிஎஸ்ஐ வீழ்த்துவோம் என்று கூறினார். இதன் மூலம் NDA கூட்டணியில் அமமுக இடம்பெறாது என்பதையும் உறுதி செய்துள்ளார்.
