தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த முருகேசன் (54) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகிய இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். முருகேசன் அதே பகுதியில் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். அதே சமயம் ஆறுமுகநேரி போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ள சுடலைமாட சுவாமி கோவில் பூசாரி ஆகவும் பூஜை செய்து வந்துள்ளார். இப்படியான நிலையில் நேற்று மின்தடை ஏற்பட்டதால் மனைவி முத்துலட்சுமியிடம் வீட்டில் வெப்பம் அதிகமாக உள்ளது, எனவே கோவிலுக்கு சென்று ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு காலை 11 மணிக்கு வீட்டில் இருந்து முருகேசன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
பிறகு மதியம் மூன்று மணி அளவில் மனைவிய முத்துலட்சுமிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, குடிக்க தண்ணீர் கொண்டு வா நான் எடுத்து வந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதனால் மனைவி முத்துலட்சுமி கோவிலுக்கு தண்ணீர் கொண்டு சென்ற போது முருகேசன் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அலறிய நிலையில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவிடத்திற்கு வந்த போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுடலைமாட சுவாமி கோவில் கொடையின் போது ஆறுமுகநேரி பெருமாள்புரம் சேர்ந்த 26 வயதுடைய இசக்கி முத்து என்பவர் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனை முருகேசன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கி முத்து மற்றும் அவருடைய நண்பர்களான மாறி செல்வம் சுகுமார், சங்கர் என்ற சங்கரவேல் ஆகிய நான்கு பேரும் பூசாரியை கொலை செய்தது தெரிய வந்தது. தற்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
