செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த மேல் பெருமாள் சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி தமிழக அரசு பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று மணல் லாரி ஒன்று குறுக்கே வந்ததால் அரசு பேருந்து ஓட்டுனர் ரவி பேருந்தை ஓட்டி வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.
பிறகு அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த பேருந்தின் கண்ணாடியை முன்பக்கம் மற்றும் பின்பக்கம் உடைத்து காயமடைந்த பயணிகள் 30 பேர் உள்ளிட்ட 60 பயணிகளை மீட்டனர். பிறகு 30 பேர் லேசான காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த பயணிகள் மாற்று பேருந்து மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல்பெருமாள்சேரி ஈசிஆர் சாலையில் சாலை விரிவாக்க பணிகள் ஆங்காங்கே நடந்து வருவதால் குழிகள் தோண்டப்பட்டு இருக்கும் காரணத்தால் நெருக்கமாக செல்லும்போது இது போன்ற விபத்துக்கள் நடைபெறுகிறது. இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் நடந்த இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
