திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மட்டப் பிறையூர் கிராமத்தை சேர்ந்த தசரதன் என்பவருடைய மகன் சரவணன் (22). கூலி தொழிலாளியாக பணியாற்றி வரும் சரவணன் தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது பணியை முடித்துவிட்டு அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் யாரோ குமாரை கல்லால் அடித்துள்ளனர்.
சரியாக அதே நேரத்தில் சரவணன் வந்ததால் அவரிடம் குமார், நீதானே என்ன கல்லால் அடிச்சது உண்மையை சொல்லிவிடு என்று கேட்டுள்ளார். இதற்கு சரவணன் மறுத்த நிலையில், அப்போ என்னை அடிச்சவங்க யாருன்னு உனக்கு தெரியும், அதையாவது சொல், என்னிடம் மறைக்க வேண்டும் என பார்க்காதே என கேட்டு சரவணனை வழிமறித்து வாக்குவாதம் செய்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் குமார் அவருடைய நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.
அங்கு வந்த குடிபோதையில் இருந்து அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன்,இளையராஜா மற்றும் சந்திரசேகர் ஆகிய மூவரும் இணைந்து சரவணனை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்று அவர்கள் வீட்டில் உள்ள வேப்ப மரத்தில் கட்டி வைத்து யார் அடித்தார்கள் என்று சொல் இல்லை என்றால் உன் கையை வெட்டி விடுவேன் என்று சினிமா பாணியில் மிரட்டி இரண்டு கைகளிலும் உள்ள கை விரல்களை வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் சித்ரவதை அனுபவித்து கொண்டிருந்தான். உடனே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போதை ஆசாமிகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
ஒரு கட்டத்தில் அவர்களுடைய அட்டகாசம் அதிகமான நிலையில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து அனைவரும் தப்பிச்சென்று விட்டனர். பிறகு சரவணன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள மூன்று பேரையும் தொலைபேசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
