தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பாமகவில் தந்தை மற்றும் மகனிடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கட்சி நிர்வாக பொறுப்புகளை மாறி மாறி இருவரும் கவனித்து வரும் நிலையில் யார் கையில் கட்சி உள்ளது என்பதே குழப்பமாக உள்ளது. இப்படியான நிலையில் சமீபத்தில் ராமதாஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்புமணி சந்தித்திருந்தார்.
இந்நிலையில் ராமதாஸ் உடல்நிலை குறித்து அன்புமணி பதற்றத்தை ஏற்படுத்துவதாக பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். ராமதாஸ் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்த அவர், மருத்துவரை மட்டுமே பார்த்துவிட்டு சென்றார். ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது. ஐசியூவுக்கு கொண்டு செல்லவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் தந்தையை பார்க்க முடியவில்லை என அன்புமணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
