நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறையாகும். அதனுடன் சேர்த்து திங்கட்கிழமை தீபாவளி வருவதால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை. இப்படியான சூழலில் தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 21 செவ்வாய்க்கிழமை கூடுதலாக அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி முடிந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு அல்லது மறுநாள் காலை சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பி செல்ல மக்கள் திட்டமிட்டுள்ளதால் பேருந்து மற்றும் ரயில் முன்பதிவு டிக்கெட் வேகமாக விற்று தீர்ந்து வருகின்றன.
இதனால் கடைசி நேரத்தில் திட்டமிடுபவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். அக்டோபர் 21ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டால் பண்டிகைக்கு பிறகு ஊரில் இருந்து திரும்புவோர் சிரமம் இல்லாமல் ஊர் திரும்புவார்கள். இதனால் கடந்த ஆண்டுகளிலும் தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி முடிந்த பிறகு ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்கி அரசு அறிவித்தது. இந்த வருடமும் அதே போல விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விரைவில் ஆலோசித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
