தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரிய கோட்டை கிராமத்தை சேர்ந்த வினோத் குமார் (38) என்பவருக்கு நித்யா(35) என்ற மனைவியும், ஓவியா (11), கீர்த்தி(8) என்ற இரண்டு மகள்களும் ஈஸ்வர் என்ற ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். இப்படியான நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நித்யா கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார்.
தற்போது வினோத் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனோடு மதுக்கூரில் உள்ள ஒரு காலணி வீட்டில் வசித்து வருகின்றார். மனைவி பிரிந்த ஆத்திரத்தில் மது போதைக்கு அடிமையான வினோத் குழந்தைகளை வெறுத்து அவர்களை அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த வினோத் தனது மகள் ஓவியா மற்றும் கீர்த்தி ஆகியோரை வீட்டில் இருந்து வெளியே விளையாடவும் தண்ணீர் எடுத்து வரவும் கூறியுள்ளார்.
பிறகு மகனை கொஞ்சுவது போல தூக்கி வைத்து அறிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து இரண்டு மகளையும் அடுத்தடுத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
