செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே முடிசூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (46) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகின்றார். அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கும் அதே பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கும் மணல், ஜல்லி மற்றும் கம்பி போன்ற கட்டுமான பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்றத்தூர் ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை துணைத் தலைவர் தினேஷ் ராமகிருஷ்ணனிடம் “நீ வேறு எங்காவது உனது பொருள்களை விற்பனை செய்து கொள், இங்கு உன்னுடைய கடை இனிமேல் செயல்படக்கூடாது என்று கூறியுள்ளார்.
ஆனால் தொடர்ந்து ராமகிருஷ்ணன் கடை நடத்தி பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில் தினேஷ் அவரை மறைமுகமாக மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு ஆத்திரமடைந்த தினேஷ் ராமகிருஷ்ணனுக்கு போன் செய்து, இது என்னுடைய ஏரியா இங்கு நான் மட்டும்தான் கட்டுமான பொருட்களை விற்பனை செய்வேன். அதையும் மீறி நீ விற்பனையில் ஈடுபட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவருக்கு வரும் வாடிக்கையாளர்களையும் வரவிடாமல் தடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணன் தன்னை கடை நடத்தக்கூடாது எனவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தினேஷ் மீது போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
