கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 18 மாதங்களுக்கு முடக்கி வைக்கப்பட்டது. சுகாதார சேவைகள், நலிந்த பிரிவு மக்களுக்கான நலத்திட்டங்கள், பிற முன்னுரிமைகளுக்கு அந்த பணத்தை செலவிடுவதற்காக அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. மத்திய அரசு ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதால் அகவிலைப்படி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்பதே பெரும் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.
பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் இணைந்த தொழில்துறை கூட்டமைப்புகளின் உச்ச அமைப்பான அரசு ஊழியர் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊழியர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்தது. ஆனால் கூட்டத்திற்கு முன்பாகவே அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய கோரிக்கை திரும்ப பெறப்பட்டது. ஊழியர் அமைப்புகளும் இந்த பிரச்சனையை தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அந்த தொகை கிடைக்காது என கூறப்படுகிறது.
