தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்த தொடக்கத்திலிருந்து பாஜக மற்றும் திமுகவை தங்கள் எதிரி என தொடர்ந்து கூறி வருகிறார். இதனிடையே சமீபத்தில் கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனிடையே சமீபத்திய கசப்பான அனுபவங்களுக்கு பிறகு விஜய் தன்னுடைய இயக்கத்தில் பெரிய மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளார். அதாவது முக்கிய நிர்வாகிகளை மாற்றுவது முதல் புதிய தலைமுறை உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது வரை பல முயற்சிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். இடி அரசியல் அரங்கில் வேறொரு விதையை மக்கள் காண கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நெருக்கடியான தருணத்தில் காணாமல் போனது விஜய்க்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் நிர்வாக அமைப்பை மீள் ஆய்வு செய்து நம்பிக்கை இழந்த நிர்வாகிகளை நீக்கவும் அல்லது அவர்களுடைய பொறுப்புக்களை குறைப்பதற்கோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விஜய் இனி அரசியல் முடிவுகளை நேரடியாக எடுத்துக் கொள்வார் எனவும் இளைஞர்கள் மற்றும் திறமையான நபர்கள் அடங்கிய புதிய குழுவை உருவாக்குவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அரசியலில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பின்னர் விஜய் நிதானமான, ஆனால் துணிச்சலான ஒரு நிலைப்பாட்டை தற்போது எடுத்துள்ளார்.
கூட்டணி அரசியலை தவிர்த்து தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக உள்ள விஜய் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தான் தெரிகிறது. அதனால் வரும் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. மக்கள் அளிக்கும் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய அரசியல் பயணத்தை தொடரவா அல்லது திரைத்துறைக்கு திரும்பவா என்பது குறித்து விஜய் முடிவெடுக்க உள்ளார்.
அதுவே போதுமான ஆதரவு கிடைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவார் எனவும் தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் இதுவரை ஒரு ரசிகர் மன்றமாக செயல்பட்ட போதும் இனி அது ஒரு அரசியல் கட்சியாக மாற வேண்டும் என விஜய் தெளிவான முடிவு எடுத்துள்ளார். இனி அவர் நேரடியாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு மக்களுடன் நெருங்கி பணியாற்றுவார் என தெரிகிறது. ஆக மொத்தத்தில் விஜயின் இந்த அதிரடியான முடிவுகள் அவருடைய அரசியல் பயணத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றே கூறப்படுகிறது.
