கேரள மாநிலம் கம்பவள்ளிகூடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் புதுப்பாரியாரம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
பின்னர் கவலையுடன் வீட்டிற்கு நடந்து சென்ற போது எஸ்டேட் சந்திப்பு அருகே தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வருவதை பார்த்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட ராதாகிருஷ்ணன் திருடன் திருடன் என சத்தம் போட்டபடி விரட்டி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். அக்கம் பக்கத்தினர் அவருக்கு உதவி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
