தமிழகத்தில் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்தது. ஆனால் மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் ஏதும் முறையாக இல்லாத நிலையில் இந்த அரசாணை வழக்கமான திமுகவின் மடைமாற்று அரசியல் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் எதுவும் கிடையாது. முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை. சிறிது மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது, நோயாளிகளை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது.
சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றி தெரிகின்றன. டார்ச் வெளிச்சத்தில் வைத்தியம் பார்க்கப்பட்டு வருகிறது. மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் பெறும் அவதிப்படுகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு கேட்டால் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளிகள் என்று அழையுங்கள் என அரசாணை வெளியிட்டு தனது வழக்கமான மடைமாற்ற அரசியலை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. இதெல்லாம் என்ன பிழைப்பு? ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசின் அனைத்து துறைகளையும் அங்குலம் அங்குலமாக சிதைத்து சீரழித்துவிட்டு தேர்தல் நெருங்கும் நேரத்தில் கவர்ச்சிகரமான பெயர்களை மாற்றி பேச் ஒர்க் செய்யும் உங்களை மக்கள் எளிதில் மடிந்து விடுவார்களா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
