உத்திரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் சுரிமன்பூர் கிராமத்தை சேர்ந்த ரூபேஷ் என்பவருக்கு ரீனா என்ற மனைவியும் அனன்யா என்ற மூன்று வயது மகளும், கினு என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். இதனிடையே மது போதைக்கு அடிமையான ரூபேஷ் அடிக்கடி குடித்துவிட்டு தன்னுடைய மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற தனது தந்தையையும் அவர் தாக்கியுள்ளார். இப்படியான நிலையில் நேற்று இரவு ரூபேஷ் குடித்துவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் மனைவி ரீனா மற்றும் தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் ரீனாவும் அவருடைய மாமனாரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். ரீனா தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த ரூபேஷ் தனது ஒரு வயது மகனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இரவு உறவினர் வீட்டில் தங்கி விட்டு காலை கணவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது தனது ஒரு வயது மகன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு ரினா அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரூபேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
