தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக மக்களை கவரும் வகையில் அதிரடியான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் மகளிர் உரிமைத்தொகை. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 20 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 52 மாதங்களில் 3000 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு முழு நேரம் மற்றும் பகுதி நேர கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
