திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள் பேட்டை ஊசி தோப்பு பகுதியில் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கிருத்திகா. இவர்களது மகன் பூமீஸ் (2). நேற்று அங்கன்வாடியில் நடைபெற்ற முகாமில் பூமீசுக்கு 2 வயதிற்கான தடுப்பூசி போட்டுள்ளனர். இதனையடுத்து இரவில் கிருத்திகா தனது குழந்தையை தூங்க வைத்தார். இன்று அதிகாலை குழந்தை எழுந்திருக்காததால் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் குழந்தையின் உடலை வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். உடனே கிருத்திகாவின் உறவினர்கள் ஆம்புலன்சை துரத்தி வந்து அடுக்கம்பாறை பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்தனர். பின்னர் தடுப்பூசி போட்டதால் தான் குழந்தை உயிரிழந்ததாக குற்றம் சாட்டி நீதி வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
