தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சமீபத்தில் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக தினகரன் அறிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருந்த நிலையில் இபிஎஸ்-ஐ சிஎம் வேட்பாளராக ஏற்க முடியாது என தொடர்ந்து தினகரன் கூறி வருகிறார். அதோடு அமமுக வெற்றி கூட்டணியில் இணையும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய முடிவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணாமலை நட்பு ரீதியாக தன்னை சந்தித்தபோது மீண்டும் கூட்டணியில் இணைய வலியுறுத்தினார். ஆனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளோம், அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று உறுதிப்பட கூறி கூட்டணி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தினகரன் தெரிவித்துள்ளார்.
