ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு காம் ஏர் நிறுவனத்தின் விமானம் வந்தது. விமான ஊழியர்கள் 13 வயது சிறுவன் விமானத்திற்கு அருகே சுற்றித்திரிந்ததை கண்டு மத்திய தொழிலாக பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த சிறுவன் ஆப்கானிஸ்தான் குண்டுஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக ஆபத்தை உணராமல் சக்கரம் வைக்கும் பெட்டியில் ஏறி சிறுவன் பயணம் செய்தது தெரியவந்தது. அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அன்றைய தினமே அதே விமானத்தில் சிறுவன் மீண்டும் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறும்போது, இந்த சிறுவன் உயிர் பிழைத்தது அதிசயம்.
ஏனென்றால் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது சக்கரம் வைக்கும் பெட்டியில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை குறையும். காற்றழுத்தம் மற்றும் வெப்ப வசதி இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குடையும் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சக்கரங்கள் உள்ளக்கப்படும்போது உடல் நசுங்கி உயிரிழக்கும் அபாயமும் அதிகம். இந்த சூழலில் சிறுவன் உயிர் பிழைத்தது அதிசயம் எனக் கூறியுள்ளனர்.
