தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக மக்களை கவரும் வகையில் அதிரடியான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் மகளிர் உரிமைத்தொகை. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மீண்டும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக எம்பிகள் தங்கள் தொகுதிகளில் வாரத்தில் நான்கு நாட்களுக்கு தங்கி இருந்து பணியாற்ற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
தகுதியுள்ள மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கிடைப்பதை உறுதி செய்யவும், தொகுதியில் மேற்கொண்ட மக்கள் பணி குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை அளிக்கவும் எம்பிக்களுக்கு உத்தரவிட்ட ஸ்டாலின், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஒருங்கிணைந்த கட்சி பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.
