சேலம், திருமலைகிரி, இடும்பன் வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வெள்ளிப் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜீவானந்தம். இருவரும் கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்தபோது வேடுகத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பலாக வந்து மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் இரும்பாலை காவல் நிலையத்தினர் படுகாயமடைந்த மோகன்ராஜ் மற்றும் ஜீவானந்தம் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இன்றைய தினம் மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜீவானந்தம் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மோகன்ராஜ் இறப்பிற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினை தொடர்பாக இரும்பாலை காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மோகன்ராஜ் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவில் பண்டிகை தொடர்பாக இரண்டு இளைஞர் கோஷ்டிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த தாக்குதல் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
