தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை இபிஎஸ் ஜெயலலிதா பாணியில் வெளியிட்டு வருகின்றார். கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து பேசுவோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார்.
இதனிடையே அதிமுக அதிருப்தி தலைவர்கள் யாரையும் இனி சந்திக்க மாட்டேன் என்று இபிஎஸ்ஸுக்கு அமித்ஷா உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் தற்போது முகாமிட்டுள்ள ஈபிஎஸ் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது திமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் மற்றும் டாஸ்மாக் முறைகேடு குறித்த விசாரணையை வேகப்படுத்தவும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
