தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுக ஒன்றிணைப்பு தேவை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்ததை தொடர்ந்து கட்சியின் உள்ளக அரசியல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதேசமயம் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பிறந்த நாளில் பேசியபோது, டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை. அவர்கள் கட்சியை அழிக்க முயன்றவர்கள், நடுரோட்டில் தான் நிற்பார்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக தாக்கி பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி முன்னுக்கு பின் முரணாக பேசுவது அவர் தோல்வி பயத்தில் இருப்பதை நன்றாகவே காட்டுகிறது. இந்த தேர்தலில் அவர் கட்டாயம் தோற்கடிக்கப்படுவார். தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக அவரைப் புறக்கணிப்பார்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், தன்மானம்தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு டெல்லிக்கு போய் ஆதரவு கேட்பது ஏன், அது அவர் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது எடப்பாடி காப்பாற்றியது பாஜக கிடையாது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தான். அப்போது 18 எம்எல்ஏக்கள், எடப்பாடி நல்ல ஆட்சி நடத்தவில்லை என்று கூறி அவரை மாற்ற மனு கொடுத்தனர். அது துரோகம் கிடையாது. அவர் ஜெயலலிதாவின் ஆட்சி முறையில் இருந்து விலகியதால்தான் நடந்தது. அப்போது எடப்பாடி முதலமைச்சர் என்றால் நாங்கள் இருக்க மாட்டோம் என ஓடியவர் இன்றைய எடப்பாடி தான். அந்த நேரத்தில் அனைவரும் எடப்பாடிக்கு வாக்களிக்க காரணம் யார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். நன்றிக்கும் பழனிச்சாமிக்கும் சம்பந்தமே கிடையாது. துரோகம் தான் அவருடைய அடையாளம் என்று டிடிவி தினகரன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
