தமிழக வெற்றிக்கழகம் தொடங்கிய இரண்டு வருடத்திற்கு பிறகு முதன்முறையாக மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை விஜய் திருச்சி, அரியலூரில் தொடங்கினார். பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். விஜய்க்கு கூடிய கூட்டமானது அரியலூர் மற்றும் திருச்சியை ஸ்தம்பிக்க வைத்தது. பெரம்பலூரில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தும் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமல் சென்னை திரும்பினார். முதல் சுற்று பயணத்திலேயே மக்களிடம் இருந்த எழுச்சி அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விஜய் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணி ஆட்சி என்ற விஜயின் கருத்தை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். அவருடைய கருத்தில் இருந்து அவர் கூட்டணியில் சேர ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதைப்போல ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததால் அக்கட்சியும் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. அதேபோல டிடிவி தினகரன் விஜயை புகழும் விதமாக விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி உருவாக்கும் என்று கூறியிருப்பதால் அந்த கட்சியும் கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல கூட்டணி ஆட்சி என்ற நெருக்கடியை திமுகவுக்கு காங்கிரஸ் கொடுத்து வருகிறது. இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் விஜய் பக்கம் போகலாம் என்று கட்சி தலைமைக்கு ஆலோசனை கூறப்பட்டு வருகிறதாம்.
