தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது.
இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார். இன்று திருச்சியில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்காக திருச்சி வந்தடைந்தார். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்கள். தொண்டர்கள் வெள்ளத்திற்கு இடையே ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை பகுதிக்கு விஜய்யின் பரப்புரை வாகனம் ஊர்ந்து செல்கிறது. இதற்கிடையில் விஜய்க்கு எதிராக ஒருதரப்பினர் #சனியின்_பயணம் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். அதேநேரம், #தமிழகவெற்றிக்கழகம் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.
