தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது.
இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் இரண்டு மாநாடுகளை நடத்திய விஜய் அடுத்ததாக தேர்தல் பரப்புரைக்கு திட்டமிட்டு வருகிறார். வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளன்று மக்கள் சந்திப்பை தொடங்குவதே அவரது திட்டமாகும். அதுவும் பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலேயே பரப்புரையை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பனையூர் தமிழக வெற்றி கழகம் அலுவலகத்தில் பரப்புரை வாகனம் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
