தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் குடும்பத் தலைவிகளிடமிருந்து வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். விடுபட்டு போன தகுதியான மகளிர் அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெற தகுதியுள்ள மகளிர் முதல் கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
