தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை கட்டாயம் ஆட்சியை அமைத்து விடலாம் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் அதிமுக கூட்டணி பலமாக இல்லாததால் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தேமுதிக வெளிப்படையாக கூட்டணியை அறிவிக்கவில்லை என்றாலும் பிரேமலதாவின் செயல்பாடுகள் மூலம் அதிமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக கூட்டணிக்கு வாய்ப்புள்ள கட்சியில் இருந்து ஆள் தூக்கும் வேலையை எந்த கட்சியும் செய்யாது. ஆனால் நேற்று இரவு தேமுதிகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துள்ளனர். இதனால் கூட்டணி அமைப்பதில் பிணக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
